கன்னடியன் கால்வாய் திட்டப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி அதிகாரியிடம் விவசாயிகள் மனு
கன்னடியன் கால்வாய் திட்டப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி அதிகாரியிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் பகுதியில் நடந்து வரும் பாலம், குளம், கால்வாய் அமைக்கும் பணிகளை நதிநீர் திட்ட அதிகாரி தங்கப்பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க செயலாளர் லூர்துமணி மனு அளித்தார். அந்த மனுவில், நீர்ப்பிடிப்பு குளங்களான புத்தன்தருவை, வைரவம் தருவை குளங்கள் விவசாயிகளின் வாழ்வாதார குளங்களாக உள்ளன. தற்போது இந்த குளங்களை நம்பி வாழை, முருங்கை, மா உள்ளிட்டவற்றை நட்டு விவசாயிகள் பருவம் பார்த்து வருகின்றனர். தற்போது இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இந்த குளங்கள் பயன்பெறும் வகையில உள்ள சடையனேரி கால்வாய் மூலமும் தண்ணீர் வரும் நிலை இல்லை. கன்னடியன் கால்வாய் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து உபரிநீர் இந்த குளங்களுக்கு கிடைக்கும் நிலை உள்ளதாக, அப்பணிகள் நிறைவு நாளை விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். ஆதலால் திட்டப்பணிகள் நிறைவேறுவதற்கு இடையூறாக உள்ளவற்றை கண்டறிந்து தீர்வு கண்டு பணிகளை விரைந்து முடித்து புத்தன்தருவை, வைரவம் தருவை குளத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி தங்கபாண்டியன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துரையாடி கன்னடியன் கால்வாய் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். அப்போது தாசில்தார் தங்கையா மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.