பச்சை தேயிலையை வீணாக கொட்டும் விவசாயிகள்


பச்சை தேயிலையை வீணாக கொட்டும் விவசாயிகள்
x

தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யாததால், அறுவடை செய்த பச்சை தேயிலையை விவசாயிகள் வீணாக கொட்டி வருகின்றனர்.

நீலகிரி

கோத்தகிரி,

தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யாததால், அறுவடை செய்த பச்சை தேயிலையை விவசாயிகள் வீணாக கொட்டி வருகின்றனர்.

தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சிறு, குறு தேயிலை விவசாயிகள் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் தோட்டங்களில் பச்சை தேயிலையை பறித்து, தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். மலைப்பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. தற்போது தேயிலை செடிகளில் கொழுந்துகள் துளிர்விட்டு உள்ளன. மேலும் தொடர் மழையால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கடந்த மாதத்தை விட தேயிலை அதிகமாக பறிக்கப்பட்டு வருகிறது.

வீணாக கொட்டுகின்றனர்

மேலும் பச்சை தேயிலை பறிக்க போதுமான தொழிலாளர்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் குறித்த நேரத்தில் தேயிலை அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக தேயிலை முற்றி கரட்டு இலையாக மாறி விடும். இதை தவிர்க்க விவசாயிகள் பேட்டரியால் இயங்கும் நவீன எந்திரம் மூலம் பச்சை தேயிலை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் தேயிலை தொழிற்சாலைகளுக்கு, பச்சை தேயிலை வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறது. சில தொழிற்சாலைகள் தேயிலை கொள்முதல் செய்வதை நிறுத்தி உள்ளன. இதனால் விவசாயிகள் தேயிலையை வினியோகிக்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அறுவடை செய்த பச்சை தேயிலையை சாலையோரம் மற்றும் தோட்டங்களில் வீணாக கீழே கொட்டி வருகிறார்கள். இதனால் அவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

விவசாயிகளுக்கு நஷ்டம்

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, தொழிற்சாலைகள் பச்சை தேயிலையை கொள்முதல் செய்யாததால், பறித்த தேயிலையை வீணாக கொட்டி வருகிறோம். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story