ஊட்டியில் விவசாயிகள் செழுமை மையம் திறப்பு
வேளாண் இடுபொருட்களை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் ஊட்டியில் விவசாயிகள் செழுமை மையம் நேற்று திறக்கப்பட்டது.
ஊட்டி,
வேளாண் இடுபொருட்களை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் ஊட்டியில் விவசாயிகள் செழுமை மையம் நேற்று திறக்கப்பட்டது.
விவசாயிகள் செழுமை மையம்
பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளுடன் 50 சதவீத வேலைவாய்ப்புகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது.
இந்தநிலையில் வேளாண் இடுபொருட்கள் மற்றும் அது சார்ந்த சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் வகையில், விவசாயிகள் செழுமை மையம் பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று நாடு முழுவதும் காணொலி மூலம் திறக்கப்பட்டது. அதன்படி 600 மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி.பகுதியில் விவசாயிகள் செழுமை மையம் தொடங்கப்பட்டது.
சேமிப்பு கிடங்குகள்
இந்த மையத்தை கோவை வேளாண்மை துறை துணை இயக்குனர் முத்துலட்சுமி திறந்து வைத்தார். இதில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:- புதிதாக தொடங்கப்பட்ட விவசாயிகள் செழுமை மையத்தில் பயிர் காப்பீடு, பிரதம மந்திரி கிசான் திட்டம், சேமிப்பு கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையம், வேளாண்மை உற்பத்தி சார்ந்த கருத்தரங்கங்கள் போன்ற வசதிகள் உள்ளன.
மேலும் வேளாண் எந்திரங்கள் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்குதல், மாதந்தோறும் வட்டார அளவில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். நீலகிரியில் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
இதேபோல் தோட்ட பயிர்கள் குறித்த கண்காட்சி மற்றும் அதில் வரும் லாபம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. விவசாயிகளுக்கு தேவைப்படும் பல திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.