காய்ந்த இலைகளை பரப்பி தேயிலை செடிகளை பாதுகாக்கும் விவசாயிகள்
கோத்தகிரியில் உறைபனியால் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் செடிகளின் மேல் காய்ந்த இலைகளை பரப்பி தேயிலை செடிகளை விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் உறைபனியால் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் செடிகளின் மேல் காய்ந்த இலைகளை பரப்பி தேயிலை செடிகளை விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
உறைபனி தாக்கம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்தது. பனிமூட்டம் மற்றும் போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால், தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி வந்தது. மேலும் மழை தொடர்ந்து பெய்ததால் பனிப்பொழிவின் தாக்கம் காணப்படவில்லை. இந்தநிலையில் கடந்த வாரம் முழுவதும் நீர் பனிப்பொழிவு இருந்து வந்தது.
கடந்த சில நாட்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. உறைபனி காரணமாக பிற பயிர்கள் அனைத்தும் கருக தொடங்கி உள்ளது. இதன் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க போதுமான தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் விவசாயிகள், தேயிலை செடிகளுக்கு ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள்.
கருகுவதை தடுக்க...
மேலும் தண்ணீர் வசதியில்லாத தோட்டங்களில் நிழல் தருவதற்காக வளர்க்கப்பட்டு உள்ள சில்வர் ஓக் மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றி, சூரிய வெளிச்சம் படுமாறு செய்து வருகின்றனர். உறைபனியால் தேயிலை செடிகள் கருகாமல் பாதுகாக்க காய்ந்த இலைகள் மற்றும் கவாத்து செய்த தேயிலை செடிகளின் கரட்டு இலைகளை தேயிலை செடிகளின் மேல் பரப்பி வைத்து வருகிறார்கள். இதன் மூலம் உறைபனியால் தேயிலை கொழுந்துகள் மற்றும் செடிகள் கருகுவது தடுக்கப்படும். இதுகுறித்து மிளிதேன் பகுதி விவசாயிகள் கூறும்போது, இந்த ஆண்டு பனிக்காலம் தாமதமாக தொடங்கி உள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக உறைபனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் உறைபனி பொழிவு அதிகமாக இருப்பதால் தேயிலை கொழுந்துகள் கருகி வருகின்றன. இதனால் தேயிலை சாகுபடி வெகுவாக குறைந்து உள்ளது. இனி மழை பெய்து பசுமை திரும்பி செடிகளில் கொழுந்து விட்டால் மட்டுமே பச்சை தேயிலையை பறிக்க முடியும் என்றனர்.