வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைப்பதை கைவிடகோரிநெற்றியில் நாமம் அணிந்து விவசாயிகள் போராட்டம்
மோகனூர்:
மோகனூர் ஊராட்சி ஒன்றியம் வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தமிழக அரசு சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதையொட்டி வளையப்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் தொழிற்பேட்டைக்கான நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அப்பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மேலும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். எனவே வளையப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை அரசு கைவிடவேண்டும் எனகோரி சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு சார்பில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அரசிடம் இருந்து இதற்கான அறிவிப்பு எதுவும் வரவில்லை. சிப்காட் அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஏற்கனவே உண்ணாவிரதம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், மனிதசங்கிலி உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கைவிடக்கோரி நேற்று வளையப்பட்டி சிப்காட் எதிர்ப்பு இயக்க அலுவலகத்தில் இருந்து வருவாய் அலுவலகம் வரை நெற்றியில் நாமம் அணிந்து செல்லும் போராட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானவர்கள் நெற்றியில் நாமம் அணிந்து கொண்டும், கைகளில் நாமம் படம் இருந்த அட்டையை ஏந்தி சென்று கோஷங்களை எழுப்பினர்.