ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்
மன்னார்குடியில் பருத்தி கொள்முதலில் இடைத்தரகர்களை தடுக்க வலியுறுத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பூட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி
மன்னார்குடியில் பருத்தி கொள்முதலில் இடைத்தரகர்களை தடுக்க வலியுறுத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பூட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பருத்தி கொள்முதல்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி கொள்முதலில் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுத்து நிறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை, உற்பத்தி செலவு கணக்கில் கொண்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை இழுத்து பூட்டி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தமிழக காவிரி விவசாய சங்க துணை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செல்வம், ராஜேந்திரன், சதாசிவம் உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
உரிய விலை நிர்ணயம்
அப்போது தமிழக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவதுகாவிரி டெல்டாவில் கோடை நெல் சாகுபடி செய்து வந்த விவசாயிகளை தமிழக அரசு மாற்று பயிர் சாகுபடி செய்ய வலியுறுத்தி ஒலிபெருக்கி கட்டி விளம்பரம் செய்தது. இதை நம்பி விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்தனர்.கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ பருத்தி ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் வியாபாரிகள் சிண்டிகேட் ஏற்பாடு செய்து விவசாயிகளிடம் கிலோ ரூ.50, 60-க்கு தான் பருத்தி கொள்முதல் செய்வோம் என்று கூறுகிறார்கள்.தமிழக அரசு இதில் நேரடியாக தலையிட வேண்டும். பருத்தி குறைந்த பட்ச ஆதார விலை 60 ரூபாய் 80 பைசா என்பது ஏற்கத்தக்கதல்ல. பருத்தி உற்பத்தி செலவை கணக்கிட்டு, உரிய விலை நிர்ணயம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.
நிரந்தர தீர்வு
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்துவதை தடுத்து நிறுத்தி சந்தை விலையில் கொள்முதல் செய்ய உத்தரவாதத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். காவிரி டெல்டாவில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான டன் பருத்தி கொட்டி வைக்கப்பட்டு விவசாயிகள் 15 நாட்களாக காத்திருக்கிறார்கள். எனவே தமிழக முதல்- அமைச்சர் ஒரு குழுவை அனுப்பி வைத்து கொள்முதல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.