ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
கோட்டூர் அருகே ‘சட்ரஸ்’ அமைக்கக்கோரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டூர் அருகே 'சட்ரஸ்' அமைக்கக்கோரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு போகம் சாகுபடி
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மாவட்டக்குடி கிராமத்தில் 250 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய பயன்பாட்டிற்காக புதுக்குளம், திருநாற்குளம், தட்டான்குளம், காக்கராயன்குளம், திருவாசல்குளம் ஆகிய குளங்கள் உள்ளன. மேலும் இவர்களுக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த குளங்களில் மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் நிரம்புகிறது.
இங்குள்ள 250 ஏக்கர் நிலங்களிலும் மழை பெய்தால் மட்டுமே ஒரு போகம் சாகுபடி செய்ய முடிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
ஆற்றில் இறங்கி போராட்டம்
இந்த நிலையில் கடுவூருட்டி ஆற்றில் நடைபாதையுடன் கூடிய சட்ரஸ் அமைக்க வேண்டும். மாவட்டக்குடி பாசன தலைப்பு மதகை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடுவூருட்டி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் கூறியதாவது:-
மாவட்டக்குடி கிராமத்துக்கு வெண்ணாற்று பாசனத்தில் இருந்து குடமுருட்டி ஆறு வழியாக கடுவூருட்டி ஆறு மூலம் பாசனத்துக்கு தண்ணீர் செல்கிறது. கடுவூருட்டி ஆற்றில் மாவட்டக்குடி பாசன வாய்க்கால் தலைப்பில் அமைந்துள்ள சட்ரஸ் கஜா புயலின்போது முற்றிலுமாக பழுதடைந்து விட்டது. மேலும் மாவட்டக்குடி பாசன வாய்க்கால் தலைப்பு மதகும் முற்றிலும் பழுதடைந்து விட்டது. இதனால் கடுவூருட்டி ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கி மாவட்டகுடி கிராம பாசனத்துக்கு பயன்படுத்த முடியவில்லை.
நடவடிக்கை இல்லை
இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் சகிலா வீரமணி தலைமையில் கிராம மக்கள் அனைவரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.