புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x

திருவையாறில், விளைநிலங்களை அழித்து அருகே நடவு செய்யப்பட்ட நெற்பயிரை அழித்து புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறில், விளைநிலங்களை அழித்து அருகே நடவு செய்யப்பட்ட நெற்பயிரை அழித்து புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

புறவழிச்சாைல அமைக்கும் பணி

தஞ்சையை அடுத்த திருவையாறில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து திருவையாறை அடுத்த மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், பெரும்புலியூர், திருவையாறு ஆகிய ஊர்கள் வழியாக 6.74 கி.மீ. தூரத்துக்கு ரூ.191 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இந்த புறவழிச்சாலை முழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதால் நெல், கரும்பு, வாழை, தென்னை மரங்கள், வெற்றிலைக் கொடிக்கால் அடங்கிய நிலங்களை அழித்து அதில் சாலை அமைக்கப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே திருவையாறில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போதும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

நெற்பயிரை அழித்து

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் திருவையாறு புறவழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த முனைப்பு காட்டியது. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. 50 அடி அகலம் கொண்ட சாலை அமைக்கப்பட உள்ள நிலையில் 100 அடி அளவுக்கு தற்போது செம்மண் நிரப்பப்பட்டு வருகிறது.அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர் பகுதியில் பல நூறு ஏக்கரில் சம்பா நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்களை அழித்து அதன் மீது பொக்லின் எந்திரங்களை கொண்டு செம்மண், கிராவல்கள் பரப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்த பணிகள் நடந்து வந்தது.

எந்திரங்களை மறித்து விவசாயிகள் போராட்டம்

இந்த நிலையில் நேற்று கண்டியூர் பகுதியில் சம்பா நெற்பயிர் மீது செம்மண் கிராவல் கொண்டு நெற்பயிரை அழிப்பதை பார்த்த விவசாயிகள் திரண்டு வந்து பொக்லின் எந்திரங்களை மறித்தனர். மேலும் விவசாயிகள் கருப்பு கொடியை வயல்களில் கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்த நடத்தினார்.

இழப்பீட்டு தொகை தரவில்லை

அப்போது விவசாயிகள், தங்களது நிலத்தை கையகப்படுத்த எந்தவித அறிவிப்பும், நோட்டீசும் வழங்கவில்லை. அதற்கான இழப்பீடு தொகையையும் கொடுக்கவில்லை. தற்போது சம்பா சாகுபடியாக நடவு செய்துள்ளோம். நெற்கதிர் வரும் தருவாயில் உள்ளது.எங்களது கண்முன்னே நெற்பயிரை அழிப்பதை எங்களால் பார்க்க முடியவில்லை. எனவே அறுவடை முடிந்ததும் சாலையை அமையுங்கள். எங்களுக்கு உரிய இழப்பீட்டை அதிகப்படுத்தி தாருங்கள். விவசாய நிலத்தை அழித்துத்தான் சாலை அமைக்க வேண்டும் என்றால் அப்படி ஒரு சாலையே எங்களுக்கு வேண்டாம் என கூறி பணிகளை தடுத்தனர்.

கடும் வாக்குவாதம்

அப்போது துணை போலீஸ் அதிகாரிகள், விவசாயிகளை அங்கிருந்து செல்லாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், சாலை அமைக்கும் பணியை தடுத்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.இதையடுத்து விவசாயிகள் சிறிது நேரம் அங்கிருந்து போராட்டம் நடத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகள் சென்ற பின்னர் மீண்டும் இரண்டு பொக்லின் எந்திரங்களை கொண்டு நெற்பயிர்களை அழித்து சாலை அமைக்கும் பணி தொடர்ந்தது.


Next Story