மீன் பதப்படுத்தும் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


மீன் பதப்படுத்தும் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:45+05:30)

பூம்புகார் அருகே மீன் பதப்படுத்தும் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகார் பழையகரம் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்குவதால் இந்த பகுதியில் உப்பு நீராக உள்ள நிலத்தடி நீர் கடந்த 2 ஆண்டுகளாக நல்ல நீராக மாறி வருகிறது. இந்த நிலையில் பழையகரம் காவிரி ஆற்றின் அருகே தனியார் மூலம் மீன் குளிரூட்டும் மற்றும் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படுவதை அறிந்த அந்த பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடுத்து நிறுத்தக்கோரியும், தர்மகுளம் கடைவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க தலைவர் ராஜதுரை தலைமை தாங்கினார். விவசாய சங்கத்தை சேர்ந்த ராஜேந்திரன், அருண்குமார், பிரகாஷ், நாகை ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜரத்தினம் வரவேற்றார். இதில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் காவிரி தனபாலன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 'விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இந்த நிலையத்தை அமைக்க கூடாது' என வலியுறுத்தினார். இதில் கிராம பொறுப்பாளர்கள் செல்வம், சிவனேசன், பாண்டியன், அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அப்பகுதி வியாபாரிகள் 2 மணி நேரம் கடைகளை அடைத்தனர்.


Next Story