உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்
58 கிராம கால்வாயில் தண்ணீரை திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினார்கள்.
உசிலம்பட்டி,
58 கிராம கால்வாயில் தண்ணீரை திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினார்கள்.
குறை தீர்க்கும் கூட்டம்
உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கருப்பையா தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட 58 கிராம பாசன கால்வாய் சங்க விவசாயிகள் திடீரென்று தரையில் அமர்ந்தனர். திடீரென்று தாங்கள் அணிந்திருந்த பச்சை துண்டால் வாய்ப்பூட்டு போட்டு நூதன போராட்டம் நடத்தினர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது, 58 கிராம கால்வாயில் நீரை திறக்க வலியுறுத்தி மதுரை கலெக்டர் முதல் முதல்வர் வரை கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும், ராமநாதபுரம், மேலூர் பகுதி விவசாயிகள் கூட உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் நீரை திறக்க ஆட்சேபனை தெரிவிக்காமல் அனுமதி அளித்துள்ளதாகவும், அதிகாரிகள் தண்ணீரை திறக்க கால தாமதபடுத்தி வருவதாகவும் அதை கண்டித்து இந்த நூதன போராட்டம் நடத்திேனாம் என்றனர்.
பேச்சுவார்த்தை
இதனைக் கண்ட உசிலம்பட்டி தாசில்தார் கருப்பையா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து இன்னும் ஒருவாரத்தில் 58 கிராம கால்வாயில் பாசனத்திற்காக நீரை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். அதன் பின்னர் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது .