கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கருகிய நெற்பயிர்களுடன் நிவாரணம் கோரி விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கருகிய நெற்பயிர்களுடன் நிவாரணம் கோரி விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருகிய நெற்பயிர்கள்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். குறிப்பாக இந்த ஆண்டு பருவமழை இன்றி விவசாயம் பாதிக்கப்பட்டதால் ஏராளமான விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து கருகிய நெற்பயிர்களுடன் முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஏராளமான விவசாயிகள் கருகிய நெற்பயிர்களுடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார பகுதிகளில் நெல் விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. நெற்பயிர்களை ஆடுமாடுகள் மேய்ந்து வருகிறது. கடன் வாங்கி விவசாயம் செய்த எங்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. வாழ்வதா, சாவதா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நெற்பயிர்களின் நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் கிடைக்க செய்ய வேண்டும்.
நடவடிக்கை
மேலும் மத்திய அரசின் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் முழுமையான இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல, பரமக்குடி தாலுகா வாதவனேரி கிராம விவசாயிகளும், ராமநாதபுரம் தாலுகா அலமனேந்தல் குரூப் மாதவனூர் கிராம விவசாயிகளும் கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசின் நிவாரணமும், பயிர்காப்பீடு இழப்பீடும் வழங்க கோரி மனு அளித்தனர்.
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மாவட்டத்தின் நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். கலெக்டர் அலுவலக வளாக பகுதி முழுவதும் கருகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் திரளாக வந்திருந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.