தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் போராட்டம்
தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை வீழ்ச்சி அடைந்ததால் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபடுவது என்று தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி தேங்காய்களுடன் விவசாயிகள் ஏராளமானோர் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் உடைத்த தேங்காய் சாலையில் நாலாபுறமும் சிதறியது.
போராட்டத்தின்போது, அரசே நேரடியாக தேங்காய்களை கொள்முதல் செய்ய வேண்டும். உரித்த தேங்காய் 1 கிலோவுக்கு ரூ.50, கொப்பரை 1 கிலோவுக்கு ரூ.140 வழங்க வேண்டும். தென்னை மரத்துக்கு காப்பீடு வழங்க வேண்டும். 100 சதவீத மானியத்தில் உரம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பரபரப்பு
இந்த போராட்டத்துக்கு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அம்சராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தை தொடர்ந்து அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் சாலையில் சிதறிக்கிடந்த தேங்காய்களை சேகரித்து வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.