சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுமலையாறு பாசன வாய்க்காலை முழுமையாக தூர்வாரக்கோரி சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

கழுமலையாறு பாசன வாய்க்காலை முழுமையாக தூர்வாரக்கோரி சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கழுமலையாறு பாசன வாய்க்கால்

சீர்காழியில் உள்ள கழுமலையாறு பாசன வாய்க்காலை நம்பி அப்பகுதியில் உள்ள மேலத்தேனூர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் இந்த வாய்க்கால் சீர்காழி நகர் பகுதியில் வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது.

எனவே கழுமலையாறு பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தூர்வார வேண்டும் என பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையின் பேரில் மேலத்தேனூர் முதல் புதிய பஸ் நிலையம் வரை உள்ள 10 கி.மீ. தூரத்திற்கு தூர்வார சுமார் ரூ.22 லட்சம் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி தூர்வாரும் பணி மேலுத்தேனூர் முதல் கோவில்பத்து வரை நிறைவுபெற்றது.

முற்றுகை போராட்டம்

இந்தநிலையில் கோவில்பத்து முதல் புதிய பஸ் நிலையம் இடையேயான நகர பகுதிகளில் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டும், கழிவு நீர் கலந்துள்ளதால் அந்த பகுதிகளில் முழுமையாக தூர்வாரும் பணி நடைபெற வழியில்லை. இதனால் இந்த இடங்களில் உள்ள ஆக்கிரப்புகளை முழுமையாக அகற்றி தூர்வார வேண்டுமென விவசாய சங்க தலைவர் கோவி நடராஜன், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் ராமானுஜம் ஆகியோர் தலைமையில் ஏராளமான விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து உதவி செயற்பொறியாளர் விஜயகுமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதற்கு உதவி செய்ய பொறியாளர் விவசாயிகளுக்கு உரிய பதில் அளிக்காததால் ஒன்றியக்குழு உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை மனு

போராட்டத்தின் போது விவசாயிகளை அவமதித்த உதவி செயற்பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவில்பத்து முதல் புதிய பஸ் நிலையம் வரை கழிவு நீரை பாசன வாய்க்காலில் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாசன வாய்க்காலில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட பாலத்தை அகற்ற வேண்டும், பாசன வாய்க்காலில் இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) கோவில் பத்து முதல் புதிய பஸ் நிலையம் வரை உள்ள வாய்க்கால்களை முழுமையாக தூர்வார விவசாயிகள் முன்னிலையில் நடவடிக்கை எடுக்கப்படும், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட பாலங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை விளக்கிக் கொண்டனர். தொடர்ந்து சீர்காழி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று விவசாய சங்க நிர்வாகிகள் நகராட்சி ஆணையர் வாசுதேவனிடம் பாசன வாய்க்காலில் கழிவுநீர் விடுவதை தடுக்கக்கோரி கோரிக்கை மனுக்களை கொடுத்து சென்றனர்.


Related Tags :
Next Story