டிராக்டர் முன்பு படுத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கள்ளிமந்தையம் அருகே டிராக்டர் முன்பு படுத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளிமந்தையம் அருகே உள்ள தும்பிச்சிபாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் டிராக்டர் முன்பு தரையில் படுத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க திருப்பூர் மாவட்ட அமைப்பு செயலாளர் பாலு கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, டிராக்டர் முன்பு விவசாயி ஒருவர் படுத்து கொண்டார். அப்போது உயர் மின்கோபுரம் அமைத்த வகையில் நிலம் எடுத்ததில் மின்வாரியம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விளைப்பொருட்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்ளவேண்டிய நிலை தான் உள்ளது என்று விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.