அக்னி சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டம்


அக்னி சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
x

என்.புதுப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அக்னி சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

மோகனூர்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு

மோகனூர் ஒன்றிய பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைய இருக்கிறது. இதற்கான நிலம் கையகப் படுத்துவதற்காக மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி, லத்துவாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்தனர். நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்களும் விவசாயமும் பாதிக்கப்படும் என கூறி அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் சிப்காட் அமைக்கப்படுவதை கைவிட வேண்டும் என கோரி என். புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்னி சட்டி ஏந்தி போராட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், சிப்காட் எதிர்ப்பு குழு ராம்குமார், சரவணன், பழனிவேல் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் அக்னி சட்டி எடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாய நிலங்கள் பாழ்படுவதை தடுக்க விவசாயிகளின் நலனை கெடுக்கும் சிப்காட் அமைப்பதை கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்னி சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகி பிரபாகரன், கொ.ம.தே.க. மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள், சிப்காட் எதிர்ப்பு குழுவினர், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story