10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டியில் 7-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டியில் 7-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்
உசிலம்பட்டி,
தமிழகத்தில் விவசாயிகள் விளைவித்த உற்பத்தி பொருட்களுக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரமும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்க வேண்டும், தென்னங்கல் இறக்க அனுமதி, 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திலும் பயன்படுத்த நடவடிக்கை, பாலுக்கு உரிய விலை மற்றும் முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் 18 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் இந்த 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், உசிலம்பட்டி 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 7-வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தை சேர்ந்த தமிழக விவசாயிகள் விடுதலை கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு நஞ்சை - புஞ்சை விவசாயிகள் சங்கம், களஞ்சியம் பெண்கள் இணைப்பு குழு என பல்வேறு விவசாய சங்கத்தினர் இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது பசும்பாலுக்கு உரிய விலை வழங்க வலியுறுத்தி பசுமாடுகளுடன் கோஷங்கள் எழுப்பி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.