நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சீர்காழி அருேக விளைநிலங்களில் உப்புநீர் புகுந்ததால் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெண்காடு:
சீர்காழி அருேக விளைநிலங்களில் உப்புநீர் புகுந்ததால் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் திருநகரி உப்புனாற்றில் இருந்து உப்புநீர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்களில் புகுந்தது. இதனால் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனால் நிவாரணம் வழங்கக்கோரி கதவனை கட்டும் பணி நடைபெறும் இடத்தில் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து எடமணல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் சீர்காழி அருகே பழவனாற்றில் பாசனத்திற்காக வரும் தண்ணீர் தேனூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரம் திருநகரி உப்பனார் வழியாக திருமுல்லைவாசல் கடலில் கலக்கிறது.
உப்புநீர் புகுந்து பயிர்கள் பாதிப்பு
தற்போது திருநகரி -ராதாநல்லூர் இடையே உப்பனாரில் கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதற்காக ஆற்றின் குறுக்கே மணல் கொண்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் திருநகரி உப்பனாற்றில் தேனூர் என்ற இடத்தில் உள்ள கதவணையில் இருந்து அதிக அளவில் நீர் திறந்து விடப்படுகிறது.இதன் காரணமாக உப்பனாறில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து உபரி நீர் அதிகளவில் வருவதால் தடுப்பணை பகுதியில் நீர் வடிய வழியில்லாத காரணத்தால் எடமணல், கார் வேலி மற்றும் திருக்கருகாவூர் பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள விலை நிலங்களின் உப்புநீர் புகுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
நிவாரணம் வழங்க வேண்டும்
10 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட விளைநிலங்களை உப்பு நீர் புகுந்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து இனிவரும் காலங்களில் உப்பு நீர் விளைநிலங்களில் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் கதவனை அமைக்கப்படும் இடத்தில் உள்ள மணல் தீட்டுகளை அகற்றி தேங்கிய தண்ணீரை வடிவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.