தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை கரும்பு விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் சின்னத்துரை எம்.எல்.ஏ. உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை கரும்பு விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் சின்னத்துரை எம்.எல்.ஏ. உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊர்வலம்

தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தஞ்சை கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஒன்று திரண்டனர்.இவர்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கரும்புகளை கையில் ஏந்தியபடி கூடினர்.

போலீசார் குவிப்பு

போராட்டக்காரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக விவசாயிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முடியாத அளவுக்கு இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை போலீசார் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கதவுகளையும் போலீசார் பூட்டியிருந்தனர்.

தள்ளு முள்ளு

ஊர்வலமாக வந்த விவசாயிகள் தடுப்புகளை தாண்டி கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயற்சி செய்தனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டதால் அந்த பகுதி பரபரப்புக்கு உள்ளானது.விவசாயிகள் சிலர், இரும்பு தடுப்புகளை தூக்கிக்கொண்டு சென்றனர். அவற்றை போலீசார் சென்று மீட்டனர். சிலர் தடுப்புகள் மீது ஏறினர். இவர்களை போலீசார் கீழே இறங்குமாறு கூறியதுடன் அவர்களை கீழே தள்ளியதுடன் குண்டு கட்டாக தூக்கிச்சென்றனர்.

தரையில் அமர்ந்து போராட்டம்

இந்த தள்ளு முள்ளுக்கு இடையேயும் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர்கள் ரவீந்திரன், சாமி.நடராஜன் மற்றும் கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. சின்னத்துரை ஆகியோர் தலைமை தாங்கினர்.

கோஷங்கள் எழுப்பினர்

திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடனில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். இந்த பிரச்சினையில் மாநில அரசு உடனே தலையிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.மாநில தலைவர் வேல்மாறன், செயலாளர் காசிநாதன், மாவட்ட செயலாளர் கண்ணன், தலைவர் செந்தில்குமார், மாநில செயலாளர் நாராயணசாமி, மாவட்ட பொருளாளர் பழனிஅய்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், தமிழ் தேசிய பேரியக்க மாநில செயலாளர் வைகறை, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

150 பேர் கைது

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சின்னத்துரை எம்.எல்.ஏ. உள்பட 150 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story