வாழைக்கன்றுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நிவாரணம் வழங்கக்கோரி வாழைக்கன்றுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதில் கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை, ஒதியடிக்குப்பம், ராமாபுரம், வழிசோதனைப்பாளையம், அன்னவல்லி மற்றும் அதனை சுற்றி யுள்ள 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழைகள் முற்றிலும் முறிந்து சேதமானது. ஏக்கருக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. ஆனால் இது வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை.
பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் விவசாய முன்னேற்றக்கழகத்தில் கையில் வாழைக்கன்றுகளை பிடித்தபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட செயலாளர் பாலு தலைமை தாங்கினார். துணை செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். துணை தலைவர் தணிகாசலம், செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், வீரமுத்து, ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிறுவன தலைவர் ராசாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து வாழை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம், பயிர்க்கடன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் கணேசன், கோபி, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பழமலை நன்றி கூறினார்.