பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி  விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வடபாதிமங்கலத்தில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்

வடபாதிமங்கலத்தில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் சென்ற ஆண்டு பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டது. வடபாதிமங்கலம் மற்றும் கிளியனூர் வருவாய் கிராமத்தில் உள்ள 90 சதவீதம் விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டம் அடைந்தனர்.

ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்க் காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தியும், வடபாதிமங்கலம் மற்றும் கிளியனூர் வருவாய் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று வடபாதிமங்கலம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

போராட்டத்திற்கு வடபாதிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சித்தரஞ்சன் தலைமை தாங்கினார். இது குறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் தாசில்தார் சோமசுந்தரம், வடபாதிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி ஆகியோர் சாலை மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கூத்தாநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. வடபாதிமங்கலத்தில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் கூத்தாநல்லூர், திருவாரூர், மன்னார்குடி, கோட்டூர், மாவூர், சேந்தங்குடி செல்லும் சாலைகளில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story