தண்ணீர் இன்றி காய்ந்து வரும் பயிர்களை பார்த்து கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
தஞ்சை அருகே தண்ணீர் இன்றி காய்ந்து வரும் பயிர்களை பார்த்து விவசாயிகள் கதறி அழுதனர்.
வல்லம்:
தஞ்சை அருகே தண்ணீர் இன்றி காய்ந்து வரும் பயிர்களை பார்த்து விவசாயிகள் கதறி அழுதனர்.
மேட்டூர் அணை திறப்பு
தஞ்சை கல்லணைக் கால்வாயில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ளதால், இந்த ஆற்றின் மூலம் குறுவை சாகுபடி செய்த நெல்மணிகள் பால் பருவத்தில் உள்ள நிலையில் வயல்கள் காய்ந்து வருகிறது. கடைசி தண்ணீர் விட வேண்டிய சூழலில் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக வழக்கம் போல் ஜூன் 12 -ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு வந்ததும், அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் நீர் பகிர்ந்து வழங்கப்பட்டது.
சாகுபடி
மேட்டூர் அணை திறக்கப்பட்ட போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. அப்போதிலிருந்து காவிரி, வெண்ணாறு மற்றும் அதிலிருந்து பிரிந்து செல்லும் குடமுருட்டி, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, வெட்டாறு, வடவாறு ஆகியற்றில் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் கல்லணைக் கால்வாய் ஆற்றில் மட்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நாள் முதல் ஆயிரம் கன அடிக்கு குறையாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மூலம் தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் சாகுபடியை மேற்கொண்டு வந்தனர்.
கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததை அடுத்து, கல்லணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் காவிரி, வெண்ணாறுகளில் மட்டுமே முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டு வந்தது ஆனால், கடந்த 3 நாட்களாக கல்லணைக் கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்லணைக் கால்வாயை நம்பி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் வடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
20 நாட்களுக்கு தண்ணீர்
இதுகுறித்து தஞ்சை அருகே உள்ள கல்விராயன்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆலக்குடி மனோஜிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-குறுவை, சாகுபடியில் அதிக பரப்பளவில் கல்லணைக் கால்வாய் பாசனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. குறுவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டும் விவசாயிகள் நடவு செய்துள்ளனர். தற்போது நெல்மணிகள் பால் பருவத்தில் உள்ளது. கடைசி தண்ணீர் விட வேண்டிய சூழலில் விவசாயிகள் உள்ளனர்.
இந்த நேரத்தில் கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு என்பது நிறுத்தப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் தற்போது போதிய தண்ணீர் இல்லாமல் வயல்கள் காய்ந்து வருகிறது. இன்னும் 20 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. தமிழக அரசு புதிய நடவடிக்கை எடுத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.