விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும்; அதிகாரி தகவல்
வேலூர் மாவட்ட விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பரவலாக மழை
வேலூர் மாவட்டத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி நிலத்தை உழவு செய்வதால் பல்வேறு நன்மை கிடைக்கும். கோடை காலங்களில் சாகுபடி நிலத்தை தரிசாக விடாமல் கோடை உழவு செய்வதன் மூலம் மேல் மண்ணை கீழாகவும், கீழ்மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது.
இதனால் மண்ணின் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணில் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிப்போடு மழைநீரை வீணாக்காமல் தடுத்து மண்ணுக்குள் இறங்கி மழைநீரை சேமிக்க கோடை உழவு உதவுகிறது. மேலும் பயிரின் வேர் நன்கு ஆழமாக செல்ல இது வழிவகை செய்கிறது.
கோடை உழவு செய்ய வேண்டும்
மண்ணில் உள்ள நோய் கிருமிகளும், பூச்சிகளின் முட்டைகள் கூட்டுப்புழுக்களும் நிலத்தில் உள்ள களைச்செடிகளின் விதைகளும் வெளியே தள்ளப்பட்டு வெயிலின் வெப்பத்தால் அழிக்கப்பட்டு அடுத்த பருவத்தில் பூச்சி, நோய் தாக்குதலை குறைக்க உதவுகிறது.
கோடை உழவு செய்யும் போது பயிரின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மண்ணில் இருந்து பயிருக்கு எளிதில் கிடைக்க உதவுகிறது. இதுதவிர மண் அரிமானத்தை கட்டுப்படுத்தி மண்ணில் உள்ள பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் விரயமாவதை தடுக்கிறது. எனவே விவசாயிகள் அனைவரும் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.