விவசாயிகள் பயிர் மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்


விவசாயிகள் பயிர் மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் விவசாயிகள் பயிர் மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் விவசாயிகள் பயிர் மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர் மேலாண்மை முறைகள்

சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோவில் வட்டாரங்களில் பெய்த கனமழையால் சம்பா மற்றும் தாளடி இளம்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இவ்வாறு பாதிப்படைந்துள்ள பயிர்களை நிவர்த்தி செய்ய பயிர் மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள பயிர்களில் வடிகால் வசதியை ஏற்படுத்தி வயல்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றி, பயிர்களுக்கு நல்ல காற்றோட்ட வசதி கிடைக்குமாறு செய்ய வேண்டும். மூழ்கியிருக்கும் பகுதிகளில் இளம்பயிரில் நட்ட குத்துக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால், அதே ரக நாற்றுக்கள் கிடைக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட குத்துக்களில் மறு நடவு செய்ய வேண்டும். பயிர் ஊட்டச்சத்து நிர்வாகமும் மேற்கொள்ளப்பட வேண்டும். முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் வயல்களில் குறுகிய கால நெல் ரகங்களான ஏடிடீ 45, 53 மற்றும் கோ-51 ரகங்களை நேரடி விதைப்பு செய்யலாம்.

துத்தநாக சத்து பற்றாக்குறை

தேங்கி உள்ள நீரை வடித்த உடன், வரிசை நடவு மேற்கொண்ட வயல்களில் கோனோவீடர் கருவி மூலம், மண்ணில் காற்றோட்டத்தை ஏற்படுத்தி வேர்கள் மண்ணில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொள்ள வழி வகை செய்ய வேண்டும். பயிரின் வளர்ச்சி சரியாக இல்லாமல் காணப்படும் வயல்களில் ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒருநாள் இரவு வைத்திருந்து, அதனுடன் 17 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து வயலில் சீராக தூவ வேண்டும். உரங்களை இடும்போது வயல்களில் சீராக தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பயிரின் வளர்ச்சி மிகவும் குன்றி, மஞ்சள் நிறமாக காணப்படும் வயல்களில் துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்படலாம். இதற்கு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியா (1 சதவீதம்) 1 கிலோ ஜிங்க் சல்பேட் (0.5 சதவீதம்) கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளையில் பயிரில் நன்கு நனையும்படி தெளிக்கவும்.

மேலும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியாவினால் நெற்பயிர் அழுகல் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஏக்கருக்கு 400 கிராம் கார்பண்டசிம் மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு உடனடியாக தெளிக்கவும். விவசாயிகள் பயிர் மேலாண்மை முறையை கடைபிடித்து மழைநீரால் பாதிக்கப்பட்ட பயிர்களை காத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story