துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
தோட்டக்கலைத்துறை துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோட்டக்கலை துணை இயக்குனர் கூறியுள்ளார்.
திட்டச்சேரி:
தோட்டக்கலைத்துறை துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோட்டக்கலை துணை இயக்குனர் கூறியுள்ளார்.
இது குறித்து நாகை தோட்டக்கலை துணை இயக்குநர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சொட்டு நீர் பாசனம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் நடப்பு நிதியாண்டு தோட்டக்கலை பயிர்களுக்கு 350 எக்ேடர் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் அமைக்கும் விவசாயிகளுக்கு பாசனக் குழாய்கள் அமைத்து தருதல், நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள ரூ.46 லட்சத்து 35 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பாசனக் குழாய்கள் அமைக்க எக்ேடருக்கு ரூ.10 ஆயிரம், மின்மோட்டார் அமைக்க ரூ.15 ஆயிரம், தரைநிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
51 கிராமங்கள்
எனவே அனைத்து வட்டாரங்களிலும் தொகுப்பு முறையில் துணை நிலை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தில் 80 சதவீத பணிகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 51 கிராமங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் tnhorticulture.tn.gov.in/horti/mimis என்ற இணையதளத்திலும், உழவன் செயலியிலும் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.