விவசாயிகள் உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும்
கடைசி தேதி வரை காத்திருக்காமல் விவசாயிகள் உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயிர் காப்பீடு
பருவ மழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதித்திடும் போது அவர்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.
ராணிப்பேட்டைமாவட்டத்தில் நவரை பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர், தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்தரி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். வெண்டைக்கு அடுத்தமாதம் (பிப்ரவரி) 15-ந் தேதியும், கரும்பு பயிருக்கு மார்ச் மாதம் 31-ந் தேதியும் கடைசி நாள் ஆகும்.
விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது ஒரு சர்வே எண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்தாலோ, சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை விட கூடுதலாக பதிவு செய்தாலோ, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட வழிகாட்டுதல் அடிப்படையில் தவறான பதிவுகள் என்று நீக்கம் செய்யப்படும்.
காத்திருக்காமல்
விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், இ-அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகலுடன், பயிர் காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீத தொகையையும், ஓராண்டு பயிர்கள் மற்றும் வணிகப்பயிர்களுக்கு 5 சதவீத தொகையையும் விவசாயிகளின் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
நவரை பருவ நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.495 பயிர் காப்பீட்டு கட்டணமாக செலுத்த வேண்டும். கரும்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2,730 செலுத்த வேண்டும். இதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்படி பயிர்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ, உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களையோ அணுகலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.