சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல்
தியாகதுருகத்தில் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சாத்தனூர், புக்கிரவாரி, குரூர், கீழ்நாரியப்பனூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இளநிலை உதவியாளர் கலியமூர்த்தி என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி கடந்த மாதம் 25-ந் தேதி அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அதன் பின்னர் அந்த பணியிடம் காலியாகவே உள்ளது.
இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதால் நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் எடை போடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்லை அங்கு ஆங்காங்கே கொட்டி வைத்தனர்.
மழையில் நெல் நனைந்தது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் ஏராளமான நெல் மூட்டைகள் நனைந்தது. இதில் அதில் இருந்த நெல் தற்போது முளைத்து வீணாகி விட்டது. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தியாகதுருகம் புறவழிச்சாலையில் பிரிதிவிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், மழையில் நனைந்த நெல்மணிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது நெல்மூட்டைகளை உடனே எடைபோட்டு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், வருவாய் ஆய்வாளர் சுகன்யா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நெல் மூட்டைகளை எடைபோட்டு கொள்முதல் செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக கூறினர்.
போக்குவரத்து பாதிப்பு
இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மண்டல துணை தாசில்தார் அந்தோணிராஜ் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், நெல் மூட்டைகளை எடை போட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதனை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.