நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்


நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததை  கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நேற்று விற்பனைக்காக 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல்மூட்டைகளை கொண்டு சென்றனர். அதில் 170 விவசாயிகள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய டோக்கன் (லாட்டு) வழங்கப்பட்டது. மற்ற விவசாயிகளுக்கு டோக்கன்வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்களது நெல்மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என கூறி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரில் உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த செஞ்சி போலீசார் அவர்களை சமாதானம் செய்து அழைத்து சென்றனர். இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்த நெல்மூட்டைகளுக்கு சரியான முறையில் டோக்கன் வழங்காததை கண்டித்து வியாபாரிகள் நெல் முட்டைகளை கொள்முதல் செய்யாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் நேரில் வந்து வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சரியான முறையில் டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்று வியாபாரிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். மேலும் நாளை (அதாவது இன்று) முதல் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்தனர். அதனால் நேற்று விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது. ஆனால் மணிலா, எள்ளு உள்ளிட்ட பயிர்கள் வழக்கம்போல் கொள்முதல் செய்யப்பட்டன.


Next Story