விலை வீழ்ச்சியால் சாலையில் தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்
பட்டிவீரன்பட்டி அருகே விலை வீழ்ச்சியால் தேங்காயை சாலையில் உடைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டிவீரன்பட்டி அருகே விலை வீழ்ச்சியால் தேங்காயை சாலையில் உடைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேங்காய் உடைத்து போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாகவே இப்பகுதியில் தேங்காய் விலை சரிந்து வந்தது. இதனால் தென்னை விவசாயிகள் பலரும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து விலை வீழ்ச்சியை கண்டித்து தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் அய்யம்பாளையத்தில் இன்று சாலையில் தேங்காயை உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி அய்யம்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அவர்கள் சாலையில் தேங்காயை உடைத்துக்கொண்டே ஊர்வலமாக சென்றனர். நான்கு ரோடு சந்திப்பு பகுதிக்கு வந்த விவசாயிகள் அங்கும் தேங்காயை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விலை நிர்ணயம்
இந்த போராட்டத்திற்கு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் பிச்சைமணி தலைமை தாங்கினார். இதில், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், அய்யம்பாளையம் தென்னை விவசாயிகள் சங்க தலைவர் முத்துசாமி, வியாபாரிகள் சங்க தலைவர் வெள்ளைச்சாமி மற்றும் தென்னை விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின்போது, மத்திய-மாநில அரசுகள் கொப்பரை தேங்காய் பருப்பு ஒரு கிலோவுக்கு ரூ.140 விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பச்சை தேங்காய் கிலோவுக்கு ரூ.50 விலை உயர்த்த வேண்டும், தென்னை சார்ந்த கயிறு, தரை விரிப்பு உள்ளிட்ட தொழில்களை அய்யம்பாளையம் பகுதியில் அமைக்க வேண்டும், தென்னை மரத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க நவீன தொழில்நுட்ப முறைகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.
தென்னை விவசாயிகளின் நூதன போராட்டத்தால் அய்யம்பாளையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.