சப்-கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் திடீர் முற்றுகை


சப்-கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடலூர்

விருத்தாசலம்

வியாபாரிகள் போராட்டம்

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆன்லைன் ஏலத்தில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டதால் அதற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தில் செல்போன் மற்றும் கணினி வாயிலாக விளை பொருட்களுக்கான ஏலத்தில் கலந்து கொள்ள வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்காததால் ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், மறு ஏல தேதி விவசாயிகளுக்கு செல்போன் வாயிலாக தெரிவிக்கப்படும் என ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகத்தின் சார்பில் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இதையடுத்து நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது. வியாபாரிகள் யாரும் ஆன்லைன் ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதனால் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வக்கீல் தங்க தனவேல் தலைமையில் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இ-நாம் திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து விற்பனை கூடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டும் கடந்த 2 வருடங்களாக மேற்கண்ட திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. வியாபாரிகள் வேண்டுமென்றே நடைமுறைப்படுத்தாமல் லாப நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டும் இன்றி விற்பனை கூடத்தையும் மூடி வைத்துள்ளனர். இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பரபரப்பு

மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பழனி உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதை ஏற்ற விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story