பப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்


பப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்
x
தினத்தந்தி 15 May 2023 12:30 AM IST (Updated: 15 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மக்காச்சோளம் சாகுபடி கைகொடுக்காததால், விவசாயிகள் பப்பாளி சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.

தூத்துக்குடி

மக்காச்சோளம் சாகுபடி கைகொடுக்காததால், விவசாயிகள் பப்பாளி சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது:-

மக்காச்சோளம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், சூரியகாந்தி, கொத்தமல்லி, வெங்காயம், போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டன. இதில் 30 சதவீதம் மக்காச்சோளம் சாகுபடியாகும். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு மிகவும் கைகொடுத்தது. இதற்கு பராமரிப்பு பணி சுலபமாகும். கடந்த 4 வருடங்களாக மக்காச்சோளம் பயிரில் குருத்துப்பூச்சி எனப்படும் அமெரிக்கன் படைப்புழு பயிர் முளைத்து 25-வது நாளில் குருத்துப்பகுதியில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து தண்டுப் பகுதியை முழுவதும் அழித்து தின்று விடுகிறது. இதனால் குருத்துப்பூச்சியை அழிக்க 25 மற்றும் 40-வது நாளில் விலை உயர்ந்த மருந்து தெளிக்க வேண்டி உள்ளது. தவிர இரண்டு முறை களைபறிக்க வேண்டி உள்ளது. களை பறிக்க, மருந்து தெளிக்க, ஒரே சமயத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் கூலி ஆட்கள் தேவைப்படுவதால் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை என விவசாயிகள் சிரமப்பட வேண்டி உள்ளது. விளைவித்த மக்காச்சோளம் மகசூல் விலையும் சீராக இருப்பதில்லை. அரசும் குறைந்த ஆதார விலையை நிர்ணயம் செய்வதில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பயிர் சாகுபடி தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

பப்பாளி சாகுபடி

இந்த நிலையில் தோட்டப் பாசன விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடிக்கு மாற்றாக இந்தாண்டு பப்பாளி சாகுபடிக்கு மாறி வருகின்றனர். பப்பாளி சாகுபடி மற்றும் பராமரிப்பு சுலபம் என்பதால் சில கிராமங்களில் பப்பாளி சாகுபடி செய்து உள்ளனர். ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் வீதம் நடுகின்றனர். பப்பாளி 10-வது மாதம் காய்ப்புக்கு வந்துவிடுகிறது. ஒரு மரத்தில் 50 பப்பாளிபழம் வரை காய்க்கிறது. பொதுவாக பப்பாளி என்பது அன்றாடம் உண்ணக்கூடிய பழமாகும். ஆனால் அதுபோல் இல்லாமல் இந்த புதிய வகை பப்பாளி விளைந்த காய் பருவத்தில் அதன் தோல் மீது பிளேடால் கீறி விட்டு அதில் சுரக்கும் பால் போன்ற நீரை பாத்திரத்தில் பிடித்து கேனில் நிரப்புகின்றனர். ஒரு ஏக்கருக்கு 50 கிலோ வரை அந்த பால் போன்ற நீர் கிடைக்கிறது. அதை பாடம் செய்து பல்வேறு மருத்துவகுணம் மிக்க மாரடைப்பு, எலும்பு முறிவு, சர்க்கரை நோய், நீர், வாதம் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்த மாத்திரைகள், டானிக், பொடி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

அதே போன்று முககிரீம், கேசரி பவுடர், கேக் பவுடர் என எண்ணற்ற பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த மரம் 4 ஆண்டுகள் வரை காய்த்து கொண்டிருக்கும். 10-வது மாதம் முதல் ஒவ்வொரு பதினைந்து நாட்கள் இடைவெளிவிட்டு பப்பாளியை கீறி அதன் நீரை பாத்திரத்தில் பிடிக்கின்றனர். இந்த பால்போன்ற நீர் ஒரு கிலோ ரூ.130-க்கு விவசாயிகளிடம் இருந்து வாங்குகின்றனர். இது ஓரளவு கட்டுபடியாகக் கூடியதாகும். தவிர பப்பாளி சாகுபடிக்கு குறைந்த வேலை ஆட்களே போதுமானதாகும். இதனால் முதற்கட்டமாக தோட்ட பாசன விவசாயிகளும் அதன் பின்னர் மானாவாரி விவசாயிகளும் பப்பாளி சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். எனவே அரசு பப்பாளி சாகுபடியை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பொருளாதார ரீதியாக உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story