விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம்:
பாபநாசம் தாலுகா திருவைக்காவூர் பஞ்சாயத்திற்குட்பட்ட மேளமாஞ்சேரி கிராமத்தில் பட்டத்துகன்னி என்ற வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் 35 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இந்த நிலையில் இந்த பாசனவாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கும்பகோணம் பொதுப்பணிதுறை நீர்வளத்துறையின் ஆற்று பாசன உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தர்மராஜன் தலைமை தாங்கினார். கும்பகோணம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பட்டத்துகன்னி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதை தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் சாட்சிலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பொதுப்பணித்துறை நீர்வளத்துறையின் ஆற்று பாசன உபகோட்ட உதவி செயற்பொறியாளர் யோகேஸ்வரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், பாபநாசம் தாலுகா திருவைக்காவூர் பஞ்சாயத்திற்குட்பட்ட மேளமாஞ்சேரி கிராமத்தில் பட்டத்துகன்னி வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து பாசன வசதியை தடுத்து வைத்துள்ளனர். இந்த காரணத்தால் தற்போது அந்த வாய்க்கால் இருந்த இடமே தெரியாத அளவிற்கு உள்ளது. எனவே வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றி விவசாய நிலங்கள் மீண்டும் பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.