விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியைச் சுற்றி, 3-வது கட்ட புறவழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டும் மதிப்பை விட குறைந்த அளவிலான தொகையே நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. ஆகவே, கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி கொற்கை மற்றும் அண்ணலக்ரஹாரம் ஊராட்சியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் மாசிலாமணி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட அமைப்பாளர் சாமு.தர்மராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம், துணை செயலாளர் துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.