விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கொள்ளிடத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கொள்ளிடம்:
கொள்ளிடம் புதிய பஸ் நிலையம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெய சக்திவேல் முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் கலியமூர்த்தி வரவேற்றார். இதில் விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் சிவராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். பருவம் தவறி பெய்த கனமழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் காப்பீடு தொகை ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். உளுந்து, பயிறு, பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட தானியங்களுக்கு பாதிப்புக்கு ஏற்ப நிவாரண வழங்கிட வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீத வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.