குறுவை சாகுபடியில் அதிக விளைச்சல் இருந்தும் லாபத்தை தட்டிப்பறித்த மழை - விவசாயிகள் கண்ணீர்
குறுவை சாகுபடியில் அதிக விளைச்சல் இருந்தும் லாபத்தை மழை தட்டிப்பறித்து விட்டதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
குறுவை சாகுபடியில் அதிக விளைச்சல் இருந்தும் லாபத்தை மழை தட்டிப்பறித்து விட்டதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
குறுவை சாகுபடி
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடப்பு ஆண்டு முதல் போக சாகுபடியாக குறுவை சாகுபடியினை அப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டனர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து மே மாதமே தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆறுகளில் தண்ணீர் தேவையான அளவுக்கு சென்றதால், விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை சிரமமின்றி மேற்கொண்டனர்.
கூத்தாநல்லூர் பகுதியில் நடந்த குறுவை சாகுபடியில் கடந்த ஆண்டை விட அதிக விளைச்சல் கிடைத்தது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி வெகு நாட்கள் நீடிக்கவில்லை. விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து மகசூல் பார்க்க இருந்த நேரத்தில் திடீரென மழை கொட்டியதால், நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது.
விவசாயிகள் கண்ணீர்
அதன் பிறகு அறுவடை முடிந்து கிடைத்த நெல்லிலும் ஈரப்பதம் அதிகம் இருந்ததால் நெல்லை உடனடியாக விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். இடையிடையே மழை கொட்டுவதால் நெல்லை முழுமையாக காய வைக்க முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாக குறுவை சாகுபடியில் அதிக விளைச்சல் இருந்தும் லாபத்தை மழை தட்டிப்பறித்து விட்டதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
கூடுதல் செலவு
இதுகுறித்து கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்,
'மழையில் நனைந்த நெல்லை முழுமையாக காய வைத்து விற்பனை செய்ய வழியில்லை. அதிக விளைச்சல் இருந்தும் லாபம் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறோம். திடீரென மழை பெய்து காய வைத்த நெல்லை, நனைத்து விடுகிறது. மீண்டும், மீண்டும் நெல்லை காய வைத்து கூடுதலாக செலவு செய்து வருகிறோம்.
கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நெல்லை மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். இந்த நிலையில் அடிக்கடி மழை பெய்வதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.