உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x

உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

திருச்சி

உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜெயராமன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க செயலாளர் சுப்பிரமணியம் பேசுகையில், புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் அருகே இருந்து செல்லும் உய்யகொண்டான் வாய்க்காலில் மாநகர பகுதிகளில் கழிவுநீர் கலப்பதால் பாசன நிலங்கள் சாகுபடி பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள். ஆகவே வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றார்.

வாழைகளுக்கு நஷ்டஈடு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், தனியார் நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கும்போது, 7 முதல் 9 சதவீதம் வட்டி என்று கூறிவிட்டு, பின்னர் கந்துவட்டி வசூலிக்கிறார்கள். வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு சவுக்கு மூங்கிலுக்கு கடன் கொடுக்காமல் ஏமாற்றுவது ஏன்?. காற்றில் சாய்ந்த வாழைகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றார்.

மண்ணச்சநல்லூரை சேர்ந்த விவசாயி மருதமுத்து தலைமையில் கூட்டத்தில் இருந்து வெளியே வந்த விவசாயிகள் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நாகை மாவட்டம் ஆதனூர் குமாரமங்கலம் கதவணை கட்டுமான பணியில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாகவும், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றனர்.

சமீபத்தில் வீசிய காற்றினால் சாய்ந்த வாழைகளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு கொண்டு வந்து கலெக்டரிடம் காண்பித்தனர். இதேபோல் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர். இதையடுத்து தாமதமாக வந்த வனத்துறை அதிகாரியிடம் கலெக்டர் பிரதீப் குமார் கேள்வி எழுப்பியதோடு, மற்ற அதிகாரிகளை உடனடியாக வரவழைக்குமாறு கூறினார்.


Next Story