காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணியை விவசாயிகள் பார்வையிட்டனர்
காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணியை விவசாயிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நதிநீர் இணைப்பின் முதல் கட்டமாக மாயனூர் காவிரியில் கதவணை கட்டப்பட்டது. மழைக்காலத்தில் வீணாகச் சென்று கடலில் கலக்கும் தண்ணீரை வறட்சியான மாவட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என நல்ல நோக்கத்தில் மத்திய, மாநில அரசு காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் கொண்டு வந்தது. இதில் முதல் கட்டமாக மாயனூர் காவிரியில் இருந்து காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மேட்டு திருக்காம்புலியூர் பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணியை புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டத்தை சேர்ந்த தலைவர் துரைராஜ் தலைமையில் 70 விவசாயிகள் பார்வையிட்டனர். அப்போது காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணி தற்போது மந்த நிலையில் நடைபெறுவதாகவும், மாநில அரசு இந்த திட்டத்திற்கு தேவையான அதிக நிதி ஒதுக்கி பணியை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.