குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து காலி சாக்குகளுடன் விவசாயிகள் வெளிநடப்பு
உரதட்டுப்பாட்டை ஏற்படுத்தும் மத்திய அரசை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து காலி சாக்குகளுடன் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிப்பாளையம்:
உரதட்டுப்பாட்டை ஏற்படுத்தும் மத்திய அரசை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து காலி சாக்குகளுடன் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட விவசாயிகளிகள் பேசியதாவது:-
மணியன்:- வேதாரண்யம் பகுதிகளில் மானாவாரி நெல் சாகுபடி ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் செய்ய வேண்டும். ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பயிர்க்காப்பீடு செய்யவில்லை
பிரபாகரன்:- மத்திய அரசு உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். ரசாயன உரம் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய அரிசி வகைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மீன்குஞ்சுகள் இலவசமாக வழங்க வேண்டும்.
ராமதாஸ்:- கடைமடை மாவட்டமான நாகையில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆனால் இதுநாள் வரை குறுவை பயிர்க்காப்பீடு செய்ய எந்த ஒரு இன்சூரன்ஸ் நிறுவனமும் முன்வரவில்லை.இதற்கு காரணம் மாவட்ட நிர்வாகம் தான். குறுவை சாகுபடி பரப்பளவை குறைவாக கணக்கீடு செய்து கொடுத்ததால் தான் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு செய்ய முன்வரவில்லை.
வஞ்சிக்கும் செயல்
நாகை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2,500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து குறுவை தொகுப்பு வழங்கி உள்ளது. இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.
தமிழ்செல்வன்:-நாகை மாவட்டத்தில் டி.ஏ.பி. உரம் கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. . இதற்கு மத்திய அரசு தான் காரணம். டி.ஏ.பி. உரம் ஒரு மூட்டை போக்குவரத்து செலவுடன் ரூ.1,750 ஆகும். டி.ஏ.பி. உரம் தயார் செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒரு மூட்டைக்கு ரூ.350 மானியம் வழங்க வேண்டும். ஆனால் அந்த மானிய தொகையை மத்திய அரசு வழங்குவது இல்லை.
விவசாயிகள் வெளிநடப்பு
இதன்காரணமாக உர நிறுவனங்கள் டி.ஏ.பி. உரங்களை தயார் செய்ய முன்வருவது இல்லை. இதனால் நாகை மாவட்டம் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் டி.ஏ.பி. உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரதட்டுப்பாட்டை ஏற்படுத்தும் மத்திய அரசை கண்டித்தும் கூட்டத்தில் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.இதையடுத்து விவசாயிகள் காலி சாக்குகளுடன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.