சாக்குகளை அணிந்து வந்த விவசாயிகள்


சாக்குகளை அணிந்து வந்த விவசாயிகள்
x

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு விவசாயிகள் சாக்குகளை அணிந்து, கரும்புகளை காவடியாக தூக்கி வந்தனர்.

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமையில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விசுவநாதன் முன்னிலையில் தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், தாமோதரன், இளைஞரணி செயலாளர் கண்ணப்பா, மாவட்ட தலைவர் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.

இவர்கள் அனைவரும் சாக்குகளை உடைகள் போல அணிந்தும், கரும்புகளை வளைத்து காவடி போல தூக்கிக்கொண்டு வந்தனர். மேலும் சிறிய மண் கலயமும் ஏந்தியபடி வந்தனர். கரும்புக்கான நிலுவைத்தொகைகளை வழங்காததாலும், விவசாயிகள், நெல்மணிகளை தான் சாக்கு மூட்டையில் கட்டுவார்கள். ஆனால் விவசாயிகளை சாக்குமூட்டையில் கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை உணர்த்தும் வகையிலும், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு போதிய அளவு வரவில்லை என மண் கலையங்களுடனும் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

20 ஆயிரம் கன அடி

பின்னர் அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி கூட்டம் நடைபெற்ற அரங்குக்கு வந்து, கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

டெல்டா மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் பெய்த மழையினால் நெற்பயிர்கள் சேதமடைந்தது தெரிந்தும் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை இன்னும் வழங்கப்படவில்லை. ஆகவே, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 40 நாட்கள் ஆகியும் கடைமடை பகுதிக்கு வரவில்லை. எனவே 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்.

விவசாயத்துக்கு தேவையான உரங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. எனவே உர விலையை கட்டுப்படுத்த வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500, கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் இடுபொருட்கள் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.






Next Story