நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் திடீர் மறியல்
தோகைமலை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
தோகைமலை அருகே கல்லடை ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு சம்பா மற்றும் கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். பின்னர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்தனர். இதேபோல் இந்த ஆண்டும் சம்பா சாகுபடி அறுவடையின் போது தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்தனர்.
தற்போது கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடையை தொடங்கி உள்ளனர். ஆனால் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்க கோரி திருச்சி- தோகைமலை மெயின் ரோடு கல்லடை பிரிவு ரோடு அருகே திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தமிழ்நாடு வாணிப நுகர் பொருள் கழக கண்காணிப்பாளர் செல்வம், கல்லடை ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:- தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோடை சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது அறுவடை செய்த நெல்மணிகள் கல்லடை மாரியம்மன் கோவில் அருகே கொட்டி வைத்து உள்ளோம். ஆனால் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் நெல்மணிகள் வெயில் மற்றும் மழையில் நனைந்து வருகிறது. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து, 2 நாட்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து அனைத்து விவசாயிகளிடம் இருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்ற விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.