குண்டு மிளகாய் சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்
குண்டு மிளகாய் சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்
சிக்கல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகா மற்றும் கடலாடி தாலுகாவை சுற்றிய பெரும்பாலான கிராமங்களில் குண்டு மிளகாய் சாகுபடி விவசாயத்தில் அதிகமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் ஆண்டுதோறும் மிளகாய் சாகுபடி விவசாயமானது டிசம்பர் முதல் ஜூன் மாதம் வரை மிளகாய் சீசன் ஆகும். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மிளகாய் சாகுபடி சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிக்கல், இதம்பாடல், ஆயக்குடி, கொத்தங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்யும் பணியில் தீவிரமாகவே ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது மிளகாய் செடிகள் ஓரளவு வளர்ந்து வரும் நிலையில் மழையே பெய்யாததால் மிளகாய் செடிகள் மிளகாய் காய்க்காமல் மிளகாய் செடிகள் கருகி வருகின்றன. இதுபற்றி சிக்கல் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும் போது, மழையே பெய்யாமல் நெல் விவசாயமும் முழுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது தண்ணீரே இல்லாமல் மிளகாய் செடியும் கருகி வருகின்றன. ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்தும் எதிர்பார்த்த பலன் இல்லை. மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றனர்.