வடக்குப்புத்தாற்றில் தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பணியை தொடங்காத விவசாயிகள்

வடக்குப்புத்தாற்றில் தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பணியை தொடங்காத விவசாயிகள்
x

திருமருகல்-மருங்கூர் இடையே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் வடக்குப்புத்தாற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியை தொடங்காமல் உள்ளனர். பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல்-மருங்கூர் இடையே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் வடக்குப்புத்தாற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியை தொடங்காமல் உள்ளனர். பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலம் கட்டும் பணி

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கரையிருப்பில் திருமருகல் -மருங்கூர் இடையே வடக்குப்புத்தாற்றில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் கட்டும் பணி கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக கடந்த மாதம்(மே) 24-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.. பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் கடைமடை பகுதியில் உள்ள வடக்குப்புத்தாற்றில் இன்னும் தண்ணீர் வரவில்லை.

குறுவை சாகுபடி

வடக்குப்புத்தாறு மூலம் சீயாத்தமங்கை, வாளாமங்கலம், புறாக்கிராமம், திட்டச்சேரி, ஆலங்குடிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இ்ந்த நிலையில் வடக்குப்புத்தாற்றில் பாலம் கட்டும் பணியால் தண்ணீர் வராததால் ஆற்றுபாசனம் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பணியை விரைந்து முடிக்க வேண்டும்

இந்த பகுதியில் ஒரு சிலர் ஆழ்துளை கிணறு மூலம் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பாலம் கட்டும் பணியால் பொதுமக்கள், 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து வடக்குப்புத்தாற்றில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story