அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்


அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

கரூர்

விவசாயிகள் தேர்வு

தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் விவசாயிகளை தேர்வு செய்து ரூ.2 லட்சம் (முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-ம் பரிசு ரூ.60 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.40 ஆயிரம்) வழங்கப்பட உள்ளது. அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிக்கான விருதுபெற தமிழ்நாட்டில் வசிக்கும் சொந்த நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.

விவசாயிகள், மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மாவட்ட கலெக்டர் தலைமையில் தோட்டக்கலை இணை, துணை இயக்குனர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆகியோர் அடங்கிய மாவட்ட அளவிலான தேர்வு குழு மாவட்ட அளவிலான விருது பெறும் விவசாயிகளை ஆய்வு செய்து தேர்ந்தெடுப்பர்.

விண்ணப்பிக்கலாம்

மாவட்ட அளவிலான நிபுணர் குழுவினால் தேர்வு செய்யப்படும் விவசாயிகளில் சிறந்த விவசாயியை அங்கக வேளாண்மை மற்றும் விதை சான்றளிப்பு துறை இயக்குனர், தோட்டக்கலை கூடுதல் இயக்குனர், வேளாண் இணை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ஆகியோர் அடங்கிய குழுவால் தேர்வு செய்யப்படுவர்.

துறை இணையதளமான https://www.tnhorticulture.tn.gov.in மற்றும் மாவட்ட அலுவலகங்களில் விவசாயிகள் விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட அல்லது வட்டார அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story