நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கக்கோரி உண்ணாவிரதம்


நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கக்கோரி உண்ணாவிரதம்
x

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கக்கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மாணவர்களின் பெற்றோர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் மனு கொடுத்தனர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கலெக்டரிடம் மனு

சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் இ.சி.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியின் பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கலவரம்

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13-ந் தேதி இறந்து கிடந்தார். இதைத் தொடர்ந்து 17-ந் தேதி நடந்த கலவரத்தில் பள்ளியில் உள்ள சான்றிதழ்கள், பாடபுத்தகங்கள், மேஜை, நாற்காலிகள், பள்ளி வாகனங்கள் அனைத்தையும் கலவரக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டனர்.

மாணவி சாவு தொடர்பாக பள்ளியை சோ்ந்த 5 பேர் கைதாகி ஐகோர்ட்டு உத்தரவு படி தற்போது ஜாமீனில் மதுரையில் உள்ளார்கள். அது சட்டத்தின் படி நடக்கிறது. தவறு செய்தவர்கள் தண்டனைக்குரியவர்கள் அவர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும்.

காலம் தாழ்த்துகிறீர்கள்

மாவட்ட கலெக்டர் எங்களை நேரடியாக அழைத்து கூட்டம் நடத்தி எல்.கே.ஜி முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளும், மாற்று இடத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.

பெற்றோர்களுடன் நடந்த கூட்டத்தில் ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் உங்கள் குழந்தைகள் உங்களுடைய பள்ளி வளாகத்தில் நேரடி வகுப்புகள் நடத்தி கொள்ள அனுமதி அளிக்கின்றோம் என எங்களுக்கு முழு நம்பிக்கை அளித்தீர்கள். ஆனால் இன்று வரை சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துகிறீர்கள்.

மாணவர்களின் எதிர்காலம்

மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர், கலெக்டர் ஆகியோர் எங்களுக்கு கொடுத்த உத்தரவாதத்தின்படி நாங்களும் இத்தனை நாட்களாக பொறுமையோடு இருக்கிறோம். தற்போது 15 நாட்கள் கடந்த நிலையில் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு சரியான பதில் கிடைக்காததால் அங்கு படிக்கும் சுமார் 3 ஆயிரம் மாணவர்களின் எதிர் காலம் கேள்வி குறியாக உள்ளது.

குடும்ப சூழ்நிலையால் ஆன்லைன் வகுப்புகளில் பிள்ளைகளை எங்களால் படிக்க வைக்க முடியவில்லை. சரியாக படிக்க முடிவில்லையே என்று மாணவர்களும் மனதளவில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

உண்ணாவிரதம்

எனவே இவற்றை கருத்தில் கொண்டு இன்று(நேற்று) மாலையே எங்களுக்கு பள்ளி வளாகத்தை ஒப்படைத்து கூடிய விரைவில் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லை என்றால் நாளை அதாவது (இன்று) எங்கள் குழந்தைகளுடன் நேரில் வந்து உண்ணாவிரதம் இருப்பதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பள்ளி வளாகத்தை நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோரிடம் உறுதி அளித்தார்.


Next Story