நாடா இல்லா விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம்
மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி பல்லடத்தில் தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரதம்
மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி பல்லடம் கொசவம்பாளையம் ரோடு பிரிவில் தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் செந்தில்குமார், நடராஜன், நரேஷ் குமார், கார்த்திக், வெங்கடாசலம், கோவிந்தராஜ் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உண்ணா விரத போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியம் நடைமுறைப்படுத்தியுள்ள மின் கட்டண உயர்வு, ஜவுளி உற்பத்தித் தொழிலை மிகப் பெரிய அளவில் பாதிப்படைய செய்துள்ளது. நூல் விலையேற்றத்தால் நஷ்டத்தில் தொழில் புரிந்து வருகிறோம். பஞ்சு விலை ஏற்றம் என்பது கட்டுக்குள் வராத காரணத்தால் துணிக்கான தேவை முற்றிலும் குறைந்துவிட்டது.
மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.1.50 முதல் ரூ.2 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டோம்.
ரத்து செய்ய வேண்டும்
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதிதாகக் கொண்டு வந்துள்ள பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். நாடா இல்லாத் தறி நெசவுத் துறைக்கு என தனி மின் வகைப்பாட்டுக் கட்டணம் கொண்டு வர வேண்டும். சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கு உயர்த்தப்பட்ட நிர்வாக கட்டணம், புதிதாக விதிக்கப்பட்ட சோலார் - மேற்கூரை மின் உற்பத்திக் கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். தொழிற்சாலைகளின் மேற்கூரையில் அமைக்கப்படும் சோலார் மின் உற்பத்தி திட்டங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.