சாலையை சீரமைக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம்
தக்கலையில் சாலையை சீரமைக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம்
தக்கலை,
தக்கலையில் இருந்து முத்தலக்குறிச்சி, வட்டம் பகுதிகளுக்கு ஒரு தார் சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் ஒரு பகுதி தோண்டப்பட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது. அதன்பின்பு சாைல சீரமைக்கப்படவில்லை. இதனால், சாலையின் ஒரு புறம் பள்ளமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அந்த சாலை அமைந்துள்ள 15-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலர் கீதா நகராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் புகார் தெரிவித்தார். ஆனாலும் இதுவரை சாலையை சீரமைக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று சேதமடைந்த சாலையை பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், 'பத்மநாபபுரம் நகராட்சியில் பல சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. ராமன்பறம்பு சாலை சேதமடைந்து பல மாதமாகியும் சீரமைக்க நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என்றார்.
நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் வினோத்குமார், செயலாளர் உண்ணிகிருஷ்ணன், நகர தலைவர் நாகராஜன், ஒன்றிய தலைவர் மனோகரகுமார், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் குமாரதாஸ், கவுன்சிலர்கள் கீதா, செந்தில்குமார் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.