மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 5-ந்தேதி உண்ணாவிரதம்


மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 5-ந்தேதி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

திருவாரூர்

கொரடாச்சேரி:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

மாநாடு

ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆயத்த மாநாடு திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. மாநாட்டுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் நியமன முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

உண்ணாவிரதம்

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அகவிலைப்படி மத்திய அரசு வழங்கிய அதே தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.

இவை அனைத்தும் தமிழக பட்ஜெட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அடுத்த மாதம்(மார்ச்) 5-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story