தூத்துக்குடியில் தடையை மீறி உண்ணாவிரதம்: சமத்துவ மக்கள் கட்சியினர் 114 பேர் கைது
தூத்துக்குடியில் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த சமத்துவ மக்கள் கட்சியினர் 114 பேர் கைது செய்யப்பட்டனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் சரத்குமார் உத்தரவின் பேரில் தமிழகத்தில் போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணாநகர் 12-வது தெருவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனர். இதனை தொடர்ந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் தடையை மீறி நேற்று காலை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மத்திய மாவட்ட செயலாளர் எம்.எக்ஸ்.வில்சன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.தயாளன், வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் தொகுதி செயலாளர் ஜான் ராஜா, சின்ன தம்பி, ஆனிமுத்துராஜ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் சந்திரா, ஜெயந்தி குமார், பாரதிதாசன், சாமுவேல், துரைராஜ், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாக, போராட்டத்தில் பங்கேற்ற 54 பெண்கள் உள்பட 114 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.