தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் உண்ணாவிரதம்
வேலூரில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வேலூர் மண்டலம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட தலைவர் அருணகிரிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் திருவண்ணாமலை பாபு, ராணிப்பேட்டை பாஸ்கர், திருப்பத்தூர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் மாரிமுத்து உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
உண்ணாவிரத போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த நாள்முதல் அகவிலைப்படி வழங்க வேண்டும். காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊர்ப்புற நூலகங்கள், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தினர்.
இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.