சோலார் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; முதியவர் பலி
சோலார் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
சோலார்
சோலார் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து
ஈரோடு ஆனைக்கல்பாளையம் அருகே உள்ள முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 62). இவர் நேற்று மாலை ஈரோட்டில் இருந்து முள்ளாம்பரப்பு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சோலார் ஆனைக்கல்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே ஸ்ரீதர் சென்றபோது இவரது மோட்டார்சைக்கிளும், அந்த வழியாக முள்ளாம்பரப்பில் இருந்து ஈரோட்டுக்கு சென்று கொண்டிருந்த ரம்ஜான் (22) என்பவரது மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
முதியவர் சாவு
இந்த விபத்தில் ஸ்ரீதரும், ரம்ஜானும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆம்புலன்ஸ் மூலம் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்ரீதர் இறந்தார். படுகாயம் அடைந்த ரம்ஜான் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.