லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தலை துண்டாகி வாலிபர் சாவு- பெருந்துறை அருகே பரிதாப சம்பவம்
பெருந்துறை அருகே லாரியின் பக்கவாட்டில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெருந்துறை
பெருந்துறை அருகே லாரியின் பக்கவாட்டில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொழில் அதிபர் மகன்
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள சுண்டமேட்டூர் தடம்பறைகாடு பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். விசைத்தறி அதிபர். இவருடைய மகன் கபிலன் (வயது 22). நேற்று முன்தினம் நள்ளிரவு கபிலனும், அவருடைய தந்தையின் விசைத்தறி கூடத்தில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலம் ஹரிப்பூரை சேர்ந்த சத்யபிரதாப் தோஷ் (26) என்பவரும் மோட்டார்சைக்கிளில் அந்த பகுதியில் நடக்கும் ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றனர்.
தலை துண்டானது
அதன்பின்னர் அவர்கள் மோட்டார்சைக்கிளில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை நோக்கி சென்றுகொண்டு இருந்தனர். மோட்டார்சைக்கிளை கபிலன் ஓட்டினார். சத்யபிரதாப் தோஷ் பின்னால் அமர்ந்து சென்றார்.
நள்ளிரவு 2.30 மணியளவில் பெருந்துறை பவானி ரோடு ஆசிரியர் குடியிருப்பு பகுதி அருகே சென்றபோது முன்னால் சென்றுகொண்டு இருந்த லாரியை கபிலன் முந்திச்செல்ல முயன்றார். அப்போது மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக லாரியின் பக்கவாட்டில் மோதியது. இதில் பக்கவாட்டில் இருந்த இரும்பு ராடில் கபிலனின் கழுத்து வேகமாக பட்டு அறுபட்டது. இதனால் தலை துண்டாகி ரோட்டில் விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி,துடித்து உயிரிழந்தார்..
விசாரணை
சத்யபிரதாப் தோஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கபிலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.